முதலமைச்சராகக் கருணாநிதி வந்தால், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பார்' என்பார்கள். ஆனால், ''ஆறாவது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தந்துவிட்டு, ஆசிரியர்களை அம்போவென விட்டுவிட்டார் முதல்வர்!'' என்று தமிழக அரசின் பள்ளிக்கூடங்களில் இப்போது ஏமாற்றக் குரல்கள். அது போர்க் குரலாகவே மாற... கடந்த 24-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தி, தங்களது எதிர்ப்பைக் காட்டி இருக்கிறார்கள் ஆசிரியர்கள்! தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிப் பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், ''ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், மத்திய அரசிடம் 2008-ம் ஆண்டு அளிக்கப்பட்டபோது, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாத சுதந்திர தினத்தில் கொடி ஏற்றிப் பேசிய முதல்வர், 'அதன் பரிந்துரைகள் அப்படியே எள் முனையளவும் குறையாமல் தமிழகத்திலும் தரப்படும்!' என்றார். அமல்படுத்த சற்றுக் கால தாமதமானபோது, அதற்காக 2009-ல் இடைக்கால நிவாரணமாக மூன்று மாத சம்பளம் தந்து, தனது வாக்குறுதிக்கு உறுதி சேர்த்தார். ஆனால், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டபோது, அது ஏனோ நிறைவேற்றப்படவில்லை. இங்கேஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அமல்படுத்த அமைக்கப்பட்ட மாலதி தலைமையிலான அலுவலர் குழு, தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த 9,300 + தர ஊதியம் 4,200 என்ற விகிதப்படி மாற்றி அமைக்காமல், அதற்கு பதிலாக 5,200 +தர ஊதியம் 2,800 என்று நிர்ணயித்தது. அதிர்ச்சியாகி, இந்த ஊதிய முரண்பாட்டை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, அரசு உடனடியாக ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைவதுதான் அதன் வேலை. ஆனால், அதைச் செய்யாமல் ஆசிரியர்களைப்போல ஊதியத்தில் முரண்பாடு இருந்த மற்ற 29 அரசுத் துறைகளின் ஊழியர்களுக்கும் சம்பளத்தை மாற்றி அமைத்துவிட்டு, ஆசிரியர்களுக்கு எந்த மாற்றமும் செய்யாமல்... வெறுமனே 500 மட்டும் சிறப்புப் படியாகத் தர பரிந்துரை செய்தது. இதை எதிர்த்துத்தான் எங்கள் போராட்டங்கள் நடக்கின்றன!'' என்றார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரங்கராஜன், ''மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் என்பது நேற்று இன்றல்ல... 1988 முதல் இருந்து வரும் நடைமுறை. அதை வாங்க நடத்திய போராட்டங்கள் மிக அதிகம். அப்போது, கவர்னர் ஆட்சியின்போது, உள்ளிருப்புப் போராட்டம் உட்படப் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். எங்களை அழைத்துப் பேசிய கவர்னர் அலெக்சாண்டரின் ஆலோசகர்கள், 'தேர்தல் முடிந்து புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும்' என்றனர். அதன்படியே, அடுத்து 89-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் கலைஞர், 610-ஆக இருந்த ஆசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை 1,200 என மாற்றி அமைத்தார். அப்போது அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு எப்போது மத்திய அரசில் ஊதிய விகிதம் மாறினாலும், எங்களுக்கும் மாநில அரசு கொடுத்தது. இப்போது மட்டும் திடீரென்று 'உனக்கு அப்படி எல்லாம் தர முடியாது!' என்றால் நியாயமா?'' என்று சீறினார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காதது மட்டும் இல்லை, குழந்தைகள் கல்விப்படி 1,000, வீட்டு வாடகைப் படி, போக்குவரத்துப் படி ஆகியவையும் வழங்கப்படவில்லையாம். 2006 ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கிட்டால், ஒவ்வோர் ஆசிரியருக்கும் இதுநாள் வரை 4 லட்சத்து 79 ஆயிரத்து 950 இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கணக்குச் சொல்கிறார்கள் பாதிக்கப் பட்ட ஆசிரியர்கள். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் செ.போத்திலிங்கம், ''இந்த அரசு, ஆசிரியர் களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில், கடுகளவும் குறைக்காமல் வழங்குவோம் என்ற நம் முதல்வரின் அறிவிப்பை மீறி இப்படி ஓர் உத்தரவு வந்தது எப்படி? ஒரு நபர் குழு அறிக்கையில் ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், அவர்களுக்குப் பொருட்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். இப்போது நாங்கள் அரசிடம் கூடுதல் ஊதியம் கேட்கவில்லை, குறைக்கப்பட்டதைக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதைக் கொடுத்தால் 678 கோடி அதிகம் செலவாகும் என்று புள்ளிவிவரம் சொல் கிறார்கள் அதிகாரிகள். ஆனால், நாங்கள் எல்லோருக்கும் இப்படி உயர்த்துங்கள் என்று கேட்கவில்லை. புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் சுமார் 30 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமாவது முதலில் சரிவிகித ஊதியம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அப்படி செய்தால் பெரிய அளவில் கூடுதல் செலவு ஆகாது. தமிழக முதல்வர், எங்களுக்கு இழைக்கப்பட்டு இருக்கும் அநீதியை சரிசெய்வார் என்று நம்புகிறோம்...'' என்று கோரிக்கை வைத்தார். இதற்காக அனைத்து ஆசிரியர் இயக்கங் களும் ஒன்றிணைந்து 'டிட்டோ-ஜாக்' என்ற பெயரில் கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்துப் போராடி வருகிறார்கள். இதில் கலந்துகொள்ளாத அரசுக்கு ஆதரவான ஒரு சங்கத்தை, மன்னார்குடி பகுதியில் உள்ள அதன் உறுப்பினர்கள் கூண்டோடு கலைத்துவிட்டார்களாம். இப்படிக் கடும் அதிருப்தியில் ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், இந்தக் கோரிக்கைகளுக்குப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்டோம். ''ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை எங்கள் கவனத்துக்கு வந்ததுமே, பள்ளிக் கல்வித் துறை செயலர், இயக்குநர் மூலம் ஆசிரியர்களை அழைத்துப் பேச்சு நடத்தி இருக்கிறோம். அவர்கள் வைத்த கோரிக் கைகளை பரிசீலனை செய்து வருகிறோம். நிதித் துறையில் கலந்து பேசி, முதல்வரிடம் தெரிவித்து, என்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்வோம். ஆசிரியர்களைப் பொறுத்தவரை, இந்த அரசுதான் பல சலுகைகளை செய்தது. இப்போது, அகவிலைப்படி உயர்வைக்கூட உடனடியாக உயர்த்தித் தந்தார் முதல்வர். அதனால், நிதிச் சுமையைக் கணக்கில்கொண்டு அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், அவர்களுடன் மீண்டும் பேசி, இந்தப் பிரச்னையில் முடிவு எடுக்கப் படும்!'' என்றார். | |
|
Wednesday, October 27, 2010
Subscribe to:
Posts (Atom)